’பேவு பெல்லா பச்சடி...பிரம்ம தேவர் வழிபாடு..வசந்தம் வரவேற்கும் சைத்ர மாசம்’ - யுகாதி பண்டிகையின் சிறப்புகள்!

ஆன்மிகம்
Updated Apr 06, 2019 | 10:32 IST | பா.விஜயலட்சுமி

யுகாதியன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலைகுளித்து, புத்தாடை அணிந்து கொள்ள வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இட்டு, வெளியில் வேப்பிலை செருகி வரவேற்கின்றனர்.

ugadi, யுகாதி
யுகாதி பச்சடி  |  Photo Credit: Twitter

ஹைதராபத்: ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மக்களின் புத்தாண்டு தினமான `யுகாதி பண்டிகை’ நாளை விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது. யுகாதி அல்லது உகாதி என்று இருவகையாக சொல்லாடப்படுகிறது இந்த வருடப் பிறப்பு பண்டிகை.

மகாராஷ்டிரத்தில் இந்நாள் ‘குடிபாட்வா’ எனவும், சிந்தி மக்கள் ‘சேதி சந்த்’ எனவும் கொண்டாடுகின்றனர்.  தெலுங்கு வருடப் பிறப்பன்று ஆதிக்கம் பெற்றுள்ள கிரகம் அந்த ஆண்டின் ராஜாவாகவும், தமிழ் வருடப் பிறப்பன்று அந்நாளின் அதிபதியான கிரகம் அவ்வருடத்தின் மந்திரியாகவும் கூறப்படுகின்றன. 

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத அமாவாசைக்கு மறுதினம் யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்நாளில் தொடங்கியது என்பதைக் குறிக்கும் வகையில்  ‘யுகாதி’ என்பதாக பெயரிடப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

சைத்ர மாதத்தின் முதல்நாளே உலகை பிரம்மன் படைத்ததாக பிரம்ம புராணம் கூறுகிறது. எனவே இந்நாளில் புதிய முயற்சிகள் மேற்கொள்வது கூடுதல் பலன்களைத் தரும்.  வசந்த காலத்தை வரவேற்கும் விழாவாகவும் இது அமைகிறது. 

திருப்பதியில் ஏழுமலையான் கோயில் உற்சவாரம்பங்கள் அனைத்தும் யுகாதி முதல் நாளில்தான் சிறப்பாக துவங்கப்படும். ‘யுகாதி ஆஸ்தானம்’ என்கிற சிறப்பு வழிபாடும் நடைபெறும்.  

இதற்காக கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்படும். இந்த வருட அலங்காரத்திற்காகவும் கிட்டதட்ட 5 டன்னுக்கு மேற்பட்ட மலர்கள் திருப்பதியை வந்தடைந்துள்ளன.  யுகாதியன்று அதிகாலையே மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடைபெறும். பின்பு, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவரான மலையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும். 

அன்றைய வருடத்தைய பஞ்சாங்கம் படிக்கப்பட்டு புத்தாண்டு பலன்கள் கூறப்படும். மேலும், அன்றைய தினத்தில் ராமாயண சொற்பொழிவு கேட்டால் வருடப்பிறப்பு சுபிச்சமாக அமையும் என்பது ஐதீகமாம்.

யுகாதியன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலைகுளித்து, புத்தாடை அணிந்து கொள்ள வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இட்டு, வெளியில் வேப்பிலை செருகி வரவேற்கின்றனர். சிலர் வயல்களில் விளைந்த தானியங்களையும் வீட்டின் முகப்பில் கட்டுகின்றனர். அம்பிகைக்கான பூஜை இந்நாளில் விசேஷமானது. 

பின்னர், முதன்முதலாக ‘யுகாதி பச்சடி’ செய்யப்படுகிறது. அதில் வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவை சேர்க்கப்படும். பிறக்கும் புத்தாண்டு இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி என அனைத்து குண நலன்களையும் ஒரு சேர உடையதாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது இந்த பச்சடி. இதற்கு கன்னட மொழியில் ‘பேவு பெல்லா’ என்று பெயர். பெரும்பாலனவர்கள் இதைப் பச்சைபச்சடி என்கின்றனர்.

ஒப்பட்லு, போளி, பாயசம், புளியோகரா என விருந்து உணவுகள் நெய்வேத்தியமாக படைக்கப்படுகின்றன. அந்த் ஆண்டை வரவேற்கும் வகையில் புதிய வருட பஞ்சாங்கம் மற்றும் பஞ்சகவ்யமும் பூஜையில் வைக்கப்படுகிறது. மாலையில் அந்த வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டு, இறைவனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. மாலையில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்நாளை ஆடல், பாடல் என கொண்டாடுகின்றனர். மிகமுக்கியமாக பிரம்ம தேவரை இந்நாளில் வழிபடுவது எல்லா நலன்களையும் வாழ்க்கையில் உண்டாக்கும்!

NEXT STORY
’பேவு பெல்லா பச்சடி...பிரம்ம தேவர் வழிபாடு..வசந்தம் வரவேற்கும் சைத்ர மாசம்’ - யுகாதி பண்டிகையின் சிறப்புகள்! Description: யுகாதியன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலைகுளித்து, புத்தாடை அணிந்து கொள்ள வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இட்டு, வெளியில் வேப்பிலை செருகி வரவேற்கின்றனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola