மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனா். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் தீபாவளி முதல் வழங்கப்படும் என்று கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் அறிவித்திருந்தாா். ஆனால், தீபாவளியன்று தொடங்கப்படுவதாக இருந்த இலவச லட்டு பிரசாதத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருடந்தோறும், நாள் முழுவதும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, சொக்கநாதரை தரிசிக்க செல்லும் வகையில் முக்குறுணி விநாயகர் கோயில் அருகே இலவச லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் அனைத்துப் பக்தா்களுக்கும் 30 கிராம் அளவுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும். காலையில் கோயில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.