மீண்டும் ராமச்சந்திரன் யானை கலந்து கொள்ளும் ‘திருச்சூர் பூரம்’ இன்று கோலாகல துவக்கம்!

ஆன்மிகம்
Updated May 13, 2019 | 16:17 IST | Times Now

இந்த விழாவில் யானைகளுக்கு அடுத்து சிறப்பான அம்சம், செண்டை, மத்தளம், எடக்கா, திமிலா, கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய சிறப்பு கொண்ட இசைக்கருவிகள் இசைக்கப்படுவது. 

kerala, கேரளா
திருச்சூர் பூரம் திருவிழா  |  Photo Credit: Twitter

திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள  வடக்கும்நாதன் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பூரம் திருவிழா உலகளவில் பிரசித்தி பெற்றது. 

இந்த விழாவின் சிறப்பம்சமே யானைகளின் அணிவகுப்புதான். இதைக் காண பல்வேறு மாநில மக்களும் இங்கு கூடுவர். இந்த அணிவகுப்பில் கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட கோயில்கள் கலந்து கொள்ளும். அக்கோயில் உற்சவ மூர்த்திகள் இங்கு கூடும். ஒரு காலத்தில் ஆராட்டுபுழா பூரமாக இருந்த இது பின்னர் திருச்சூர் பூர விழாவாக மாறியது. 

ஒருநாள் மட்டுமே நடைபெறும் திருவிழா என்றாலும் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் முன்னரே துவங்கிவிடும். மத சார்பற்று எல்லா மதத்தினரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். 

இந்த விழாவில் யானைகளுக்கு அடுத்து சிறப்பான அம்சம், செண்டை, மத்தளம், எடக்கா, திமிலா, கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய சிறப்பு கொண்ட இசைக்கருவிகள் இசைக்கப்படுவது. 

மேலும், பஞ்சரிமேளம் அல்லது பஞ்சவாத்திய இசை நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞரகள் கலந்து கொண்டு இசையால் மெய்சிலிர்க்க வைப்பார்கள். 

வடக்கும்நாதன் கோயிலின் முன்பாக வாசிக்கப்படும் இலஞ்சிதாரா மேள வாத்திய இசையை பெருவனம் குட்ட மரார் என்போர் மூன்று தலைமுறைக்களுக்கும் மேலாக அரங்கேற்றம் செய்து வருகின்றனர். 

யானைகள் அணிவகுப்பில் சுமார் 100க்கும் மேற்பட்டவை கலந்து கொள்ளும். பரமேக்காவும் மற்றும் திருவெம்பாடியில் வடிவமைக்கப்படும் ஆபரணங்களான முன்புற முகத்தில் தங்க ஜரிகை நெற்பட்டம், மயிலிறகு ஆலவட்டம், வெஞ்சாமரம், முத்துகள் நிறைந்த முத்துக்குடா ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் யானைகள். கூடவே மேலே அழகு மிளிரும் அம்பாரியும் அமைந்திருக்கும். 

மேலும், வாணவேடிக்கைகளும் அமர்க்களப்படும். ஒவ்வொரு வருடமும் யானைகள் அணிவகுப்புக்கு தலைமையேற்கும் பத்தரை அடி உயரமுடைய தெச்சிகொட்டுகாவு ராமச்சந்திரன் என்ற யானைக்கு கடந்த ஆண்டு பூரத்தில் மதம் பிடித்தது. 

யானை மிதித்து கொன்றதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த ஆண்டு ராமச்சந்திரன் பங்கேற்க கூடாது என்று அரசு அறிவித்திருந்தது. யானை உரிமையாளர்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு அடுத்து ஒரு மணி நேரம் மட்டும் விழாவில் ராமச்சந்திரன் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இன்று துவங்கும் இந்த விழா நாளை முடிவடைகிறது. பூரம் திருவிழாவிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் திருச்சூரில் குவிந்துள்ளனர். 


 

NEXT STORY
மீண்டும் ராமச்சந்திரன் யானை கலந்து கொள்ளும் ‘திருச்சூர் பூரம்’ இன்று கோலாகல துவக்கம்! Description: இந்த விழாவில் யானைகளுக்கு அடுத்து சிறப்பான அம்சம், செண்டை, மத்தளம், எடக்கா, திமிலா, கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய சிறப்பு கொண்ட இசைக்கருவிகள் இசைக்கப்படுவது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola