தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்துள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இந்தியாவில் சாமுண்டீஸ்வரி கோவில் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. 2019- ஆம் ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலையில் கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து குலசை முத்தாரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். .
இன்றைய தினம் வேடமணிபவர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.