அத்திவரதர் தரிசனம்: தமிழக அரசுக்கு தமிழிசை வைத்த 12 வேண்டுகோள்

ஆன்மிகம்
Updated Jul 16, 2019 | 17:22 IST | Times Now

அத்திவரதர் தரிசனத்தின் நேரடி ஒளிபரப்பைக் காணொளி திரைகள் மூலமாக ஒளிபரப்பினால் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan, தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்  |  Photo Credit: ANI

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களின்  சார்பில் சில வேண்டுகோளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு  பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை இன்று வெளியிட்ட அறிக்கையில், "40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். பக்கத்து மாநிலத்தைத்  தாண்டி இப்போது வெளிநாடு வாழ் மக்களும் வர ஆரம்பித்து இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் மக்கள் கூடும் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் இல்லாததால் மக்கள் தினம் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாவட்ட நிர்வாகம் மாநில நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தாலும் இது நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தினம் தினம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு அதிக வசதிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். குறிப்பாக நான் அரசிற்கு வைக்கும் வேண்டுகோள்.

 1. தெற்கு மாட வீதியில் பக்தர்களுக்கு தேவையான தங்குமிட வசதி செய்து தர வேண்டும்.
 2. பக்தர்களுக்கு வேண்டிய அளவிற்கு பக்தர்கள் நின்று கொண்டிருப்பது எந்த இடமாக இருந்தாலும் குடி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
 3. பாதுகாப்பு வசதி குறிப்பாக பக்தர்கள் கொண்டு செல்லும் பொருள்களுக்கு பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்
 4. பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து காஞ்சிபுரம் வர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
 5. தமிழக பாஜக கோரிக்கை வைத்ததின் பேரில் புறநகர் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.
 6. வயதான மற்றும் ஊனமுற்றோருக்கு கோவிலுக்கு அருகில் தற்காலிக கழிப்பறை வசதிகள் தேவை. அதுமட்டுமல்ல கூட்டத்தின் அளவிற்கு ஏற்ப குறிப்பாக பெண்கள் பயன்படுத்த அதிக எண்ணிக்கையில் கழிப்பறைகள் அமைத்துதர வேண்டுகிறேன்.
 7. செட்டி தெரு, வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி மற்றும் டோல் கேட் பகுதிகளில் தகவல் மையங்கள் ஏற்படுத்தி பக்தர்களுக்கு உதவிட வேண்டும்
 8. கோவில் வளாகத்திற்குள் தரிசனத்தின் நேரடி ஒளிபரப்பைக் காணொளி திரைகள் மூலமாக ஒளிபரப்பினால் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பேருதவியாக இருக்கும் நேரத்தின் கடினம் தெரியாமல் இருக்கும்
 9. அதேபோல் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்
 10. முக்கிய நபர்களின் வருகை முறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கென்று தனிநேரம் ஒதுக்கி பின்பு மற்ற நேரங்கள் எல்லாம் தொடர்ந்து பொது மக்களுக்கு வணங்குவதற்கு ஏற்பட்டு செய்யலாம்
 11. கூடும் கூட்டத்திற்கு ஏற்ப மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி அதிகரிக்கப்பட வேண்டும்.
 12. ஆன்மிக வருகை காஞ்சியின் வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் அங்கே வரும் கூட்டம் சுற்றுலாவை மேம்படுத்தும் அளவிற்கும், பட்டுக்கு பேர் போன இடமாக இருப்பதால் நெசவாளர்களின் வாழ்வு மலர பட்டு வணிகத்திற்கு உதவுமாறு சில ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
   
NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...