விருதுநகர்: ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானது ஆகும். இந்த கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த ஜூலை 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் காலையில் ஆண்டாள் ரெங்கமன்னாா் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். மேலும், தினம்தோறும் இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு வழிவாடுகளும் வீதி உலாக்களும் நடைபெற்றது.
ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 996 ஆண்டுகள் பழமையான அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆண்டாள், ரெங்கமன்னாா் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தேரில் 7 வடங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அதில் 2 வடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏக்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், மாவட்ட ஆட்சியர் க்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்ட் ராஜராஜன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் வெள்ளத்தை தாண்டி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த தேர் நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 1500 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.