திருச்செந்தூரில் களைகட்டிய சூரசம்ஹாரம் விழா! லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஆன்மிகம்
Updated Nov 03, 2019 | 11:56 IST | Times Now

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பல லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.

Soorasamharam
Soorasamharam   |  Photo Credit: Twitter

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 27 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான  சூரசம்ஹாரம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலையில் கடற்கரையில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திரர், சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பல லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார்.

பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறிய சூரனை சுவாமி வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறிய சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சுவாமி தன்னுடன் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட்கொண்டார். இந்த நிகழ்வை திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாா்த்து ரசித்தனா். 

பின்னா் ஆறு நாள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை முடித்தனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. 
 

NEXT STORY