திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்த 10 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டனா்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து கடந்த 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேசமயம், முந்தைய தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கவில்லை.
இதையடுத்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கோயில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இன்று கேரளா வந்த 10 பெண்களை பம்பையில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனிடையே மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.