அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் குடும்பத்துடன் இன்று வருகை!

ஆன்மிகம்
Updated Jul 12, 2019 | 09:38 IST | Times Now

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார்.

President Ram Nath Kovind
President Ram Nath Kovind  |  Photo Credit: Twitter

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகிறார்கள்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்துடன் அத்திவரதரை தரிசிக்க இன்று வருகை புரியவுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நண்பகல் 12 மணிக்கு புறப்படும் குடியரசுத் தலைவர், சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 2:10 மணிக்கு வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார்.

பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணிக்குள் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை குடியரசுத் தலைவர் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதையொட்டி, விஐபி தரிசனத்திற்கு 10 முதல் 5 மணி வரை அனுமதி இல்லை. இதே போல, பொது தரிசனத்திற்கு பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை அனுமதியில்லை. குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, காஞ்சிபுரத்தில் 3,500 போலீசாரும், துணை ராணுவப் படையினர் 100 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அத்தி வரதர் தரிசனத்தை முடித்துவிட்டு, சென்னை வரும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்குகிறார். மேலும், ஆந்திரப்பிரதேசத்தின் ரேணிகுண்டாவுக்கு நாளை பிற்பகல் புறப்படுகிறார்.
 

NEXT STORY
அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் குடும்பத்துடன் இன்று வருகை! Description: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார்.
Loading...
Loading...
Loading...