ஒரே நாளில் ஐந்து கால பூஜை தரிசனம் - சிவனின் ‘பஞ்ச ஆரண்ய’ ஸ்தலங்கள்!

ஆன்மிகம்
Updated Apr 01, 2019 | 15:59 IST | Times Now

அதிகாலை முதல் நள்ளிரவு நடைபெறும் பள்ளியறை பூஜை வரையில் கலந்துகொண்டு வழிபட்டு தரிசனம் பெறும் வகையில் அமைந்தவையே இந்த ‘பஞ்ச ஆரண்ய’ தலங்கள். 

Panja aaranya temples, பஞ்ச ஆரண்ய திருத்தலங்கள்
கோயில் கோபுரம் - மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: சைவ சமயத்தில் சிவனுக்கு உகந்த ‘பஞ்ச ஆரண்ய’ தலங்களாக வழிபடப்படுகின்றன ஐந்து முக்கிய கோயில்கள்.

தென் தமிழகத்தில் ஒன்றுடன் ஒன்று அருகருகே அமைந்துள்ள இந்தக்கோயில்களில், ஒரு வரிசைக்கிரமான முறையில் ஐந்து கால பூஜைகளைத் தரிசிக்க வேண்டும். 

அதிகாலை முதல் நள்ளிரவு நடைபெறும் பள்ளியறை பூஜை வரையில் கலந்துகொண்டு வழிபட்டு தரிசனம் பெறும் வகையில் அமைந்தவையே இந்த ‘பஞ்ச ஆரண்ய’ தலங்கள். ஒரே நாளில் இந்த ஐந்து கால பூஜைகளையும் தரிசிப்பதால் இம்மையில் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று மோட்சமடையலாம் என்பது ஐதீகம்.

’ஆரண்யம்’ என்கிற வார்த்தைக்கு காடு என்று பொருள். இந்த ஐந்து தலங்களும் ஒவ்வொரு வகையான காடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இத்தலங்களில் அதிகாலை, காலை, உச்சிவேளை, மாலை, அர்த்தஜாமம் என ஐந்து முறை வழிபாடுகள் நடைபெறுகின்றன.  ஐந்து தலங்களையும் வரிசைப்படி தரிசிக்க வரைபடங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. 

திருக்கருகாவூர்:

பஞ்ச ஆரண்ய தலங்களில் முதல் தலம் ‘திருக்கருகாவூர்’ திருத்தலம். இத்தலம் கோயில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதிலிருந்தே வரிசைக்கிரமமாக மற்ற தலங்களும் சுற்றளவிற்குள்ளாகவே வருகின்றன. 

திருக்கருகாவூர் திருத்தலம் ‘அதிகாலை’ பூஜையை தரிசிக்க வேண்டிய திருத்தலம். காலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் நடைபெறும் உஷத் கால பூஜை இது. ‘முல்லைவனம்’ என்று அழைக்கப்படும் இத்திருக்கோயிலில் மூலஸ்தான இறைவன் முல்லைவனநாதர். அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை அல்லது கருகாத்தநாயகி என்றழைக்கப்படுகிறார். 

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தி என்பதால் நித்ய அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் குழந்தைபேறும், சுகப்பிரசவமும் வேண்டிக் கிடைக்கும்.  சாபத்தால் பாதிக்கப்பட்ட வேதிகை என்கிற பெண்ணின் கர்ப்பத்தை காத்து ரட்சித்ததால் அம்பாள் கருகாத்தநாயகி என்றழைக்கப்படுகிறார்.  தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 18வது திருத்தலம் இது. 

திருஅவளிநல்லூர்: 

திருக்கருகாவூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அடுத்த திருத்தலமான திருஅவளிநல்லூர் திருத்தலம். பாதிரி வனம் என்றழைக்கப்படுகிறது இத்திருத்தலம். காலை 8.30 முதல் 9.30 வரை நடைபெறும் காலை பூஜைக்கு வழிபட வேண்டிய திருத்தலம் இது. சுசீலை என்கிற அர்ச்சகர் மகளுக்கு சாட்சி சொல்லி வாழவைத்ததால் இத்திருத்தல மூலஸ்தான இறைவர் ‘சாட்சிநாதர்’ என்று பெயர் பெற்றார். அம்பாள் இங்கு செளந்தரநாயகி. 

தேவார பாடல் பெற்ற 100வது காவிரி தென்கரை திருத்தலமான இத்தலம் கும்பகோணத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நடத்தப்படும் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையையும், இனிமையான இல்லற வாழ்க்கையையும் அமைத்துத்தருமாம்!

திருஅரதைப்பெரும்பாழி அல்லது அரித்துவாரமங்கலம்:

அடுத்ததாக அமைந்துள்ள திருத்தலம்  திருஅரதைப்பெரும்பாழி அல்லது அரித்துவாரமங்கலம் திருத்தலம். வன்னிவனம் என்று அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் இறைவன் பாதாளேஸ்வரர், அம்பாள் அலங்காரநாயகியாகவும் அருள்புரிகின்றனர்.  உச்சிக்கால பூஜையான காலை 11 மணிமுதல் 12.30 வரை நடைபெறும் பூஜை வழிபாடு செய்ய உகந்தது இத்தலம். வராக அவதாரம் எடுத்து திருமால் இங்கு பள்ளம் தோண்டியதால் இத்தலம் அரித்துவார மங்கலம் ஆனது. இங்கும் இன்று அப்பள்ளம் காணப்படுகிறது. 

இத்திருத்தலத்தில் சிவபெருமானே நவக்கிரகங்களுக்கு அதிபதி என்பதால் அவர்களுக்கு தனிச்சன்னதி கிடையாது. இத்தல இறைவனை வழிபடுவதன் மூலம் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், நவக்கிரக தோஷங்களும் நீங்கும்.

திருஇரும்பூளை அல்லது ஆலங்குடி:

அரித்துவார மங்கலத்திற்கு அடுத்ததாக வழிபட வேண்டிய நான்காவது தலம் திருஇரும்பூளை எனப்படும் ஆலங்குடி. பூளைவனமாக அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர். அம்பாள் ஏலவார்குழலி. இத்தலம் சாயரட்சை அல்லது சந்தியாகால பூஜை எனப்படும் மாலை வழிபாடான 5.30 முதல் 6 மணி வரையிலான பூஜையில் வழிபாடு செய்ய வேண்டிய தலம். ஆலகால விஷத்தை அருந்தி இறைவன் உயிர்களைக் காத்த இடமே ஆலங்குடி. 

மேலும் ஒரு சிறப்பாக, குரு தட்சணாமூர்த்திக்கு உகந்த நவக்கிரக தலமான இங்கு வேண்டிக்கொண்டால் குருபலம் அதிகரித்து கல்வியிலும், ஞானத்திலும் உயர்பதம் அடையலாம்.  தேவார பாடல் பெற்ற 98வது திருத்தலம் இது. 

திருக்கொள்ளம்புதூர்: 

பஞ்ச ஆரண்யத் தலங்களில் நிறைவானது ‘திருக்கொள்ளம்புதூர்’ திருத்தலம். இங்கே சிவபெருமான் ‘வில்வாரண்யேஸ்வரர்’ என்னும் பெயரில் காட்சியளிக்கிறார். அம்பாளின் திருநாமம் செளந்தரநாயகி.  வில்வவனத்தலம் இது. தேவார பாடல் பெற 113வது திருத்தலம் இது. இங்கு, அர்த்தஜாமப் பூஜை எனப்படும் ராக்கால பூஜையை மாலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை வழிபட்டு தரிசனத்தை நிறைவு செய்ய வேண்டும். 

NEXT STORY
ஒரே நாளில் ஐந்து கால பூஜை தரிசனம் - சிவனின் ‘பஞ்ச ஆரண்ய’ ஸ்தலங்கள்! Description: அதிகாலை முதல் நள்ளிரவு நடைபெறும் பள்ளியறை பூஜை வரையில் கலந்துகொண்டு வழிபட்டு தரிசனம் பெறும் வகையில் அமைந்தவையே இந்த ‘பஞ்ச ஆரண்ய’ தலங்கள். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola