சென்னை: 37 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1982-ல் காணாமல் போன சிலை ஆஸ்திரேசியாவிற்கு கடத்தப்பட்டது. இந்நிலையில், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிலையை மீட்டுள்ளது.
மேள வாத்தியங்கள் முழங்க கோவிலுக்குள் கொண்டுவரப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 24 மணிநேரம் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். கடந்த 13-ஆம் தேதி ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட நடராஜர் சிலை நேற்று சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து, 37 ஆண்டுகளுக்கு பிறகு நடராஜர் சிலை மீண்டும் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் 37 ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பொன்னால் செய்யப்பட்ட நடராஜர் சிலை திருடு போனது. இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், வழக்கில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாததால் 1984-ஆம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து. இந்த சிலை தற்போது மீட்கப்பட்டு மீண்டும் கோவிலில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.