'தூணிலும் இருப்பார்..பக்தன் இதயத்திலும் இருப்பார்’- இன்று நரசிம்ம ஜெயந்தி விழா!

ஆன்மிகம்
Updated May 17, 2019 | 15:15 IST | Times Now

மே 17ம் தேதியான இன்று நரசிம்ம ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம் எடுத்தவர் நரசிம்மர். 

spiritual, ஆன்மிகம்
நரசிம்ம மூர்த்தி  |  Photo Credit: Twitter

சென்னை: இரண்யகசிபுவிடமிருந்து பக்த பிரகலாதனின் உயிரைக் காப்பாற்ற, உலக மக்களைக் காத்து ரட்சிக்க மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் நான்காவது அவதாரமாக உதித்தவர் நரசிம்மர். 

சிங்கமுகமும், மனித உடலுமாக தோன்றிய நரசிம்மரை ஒவ்வொரு வைகாசி மாதமும், வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில், பகலுமின்றி, இரவுமின்றி மாலை சந்திப்பொழுதில் வழிபடும் விழாவே நரசிம்ம ஜெயந்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அவ்வகையில் மே 17ம் தேதியான இன்று நரசிம்ம ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம் எடுத்தவர் நரசிம்மர். 

’தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்பது நரசிம்மரைக் குறிக்கும் சொலவடை. இரண்யகசிபுவை அழிக்க தூணைப் பிளந்து அவதரித்தவர் அவர். எதிரிகளின் தொல்லையால் அவதிக்குள்ளாகுபவர்கள் நரசிம்மரைத் தொடர்ந்து வழிபட்டு வர எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

அஷ்ட பைரவர்கள், நவ துர்க்கைகள் போலவே நரசிம்மருக்கும் நவ வடிவங்கள் இருக்கின்றன. வீர நரசிம்மர், யோக நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்பது அவருடைய ஒன்பது சிலா ரூபங்கள். 

நான்காவது என்பதே தர்மம், அர்த்தம், காமம், குரோதம்போன்ற நிலைகளைக் கடந்து மோட்ச நிலையை அடைவது என்பதைக் குறிக்கும். நரசிம்மர் வழிபாடும் வாழ்வில் மோட்சத்தையளிக்கும். 

ஆந்திர மாநிலம், உயர்ந்த மலைப்பகுதியான அகோபிலத்தில், பாவநாசினி நதிக்கரையில் அவதாரமெடுத்தவர் நரசிம்மர். முதலாவது யுகமான கிருதாயுகத்தில் நிகழ்ந்த அவதாரம் இது. நரசிம்மம் என்றால் ஒளிப்பொருந்திய பிழம்பு என்கிற பொருளும் உண்டு. 

நரசிம்ம ஜெயந்தியன்று அவருக்கு மிகவும் பிரியமான பானகத்தை படைத்து வணங்கினால் அவருடைய அருளுக்கு பாத்திரமாகலாம் என்று மங்களகிரி புராணம் கூறுகிறது. கோபத்தை தணித்து குளுமையை உண்டாக்கும் சர்க்கரைப் பொங்கல், பானகம், நீர்மோர் ஆகியவை படைத்து நரசிம்மம் எனும் கருணாமூர்த்தியை வழிபட வாழ்வில் எதிரிகள் அழிந்து எல்லா நலனும் கிட்டும்!

நரசிம்ம ஜெயந்தி வழிபாடு: 

நரசிம்ம ஜெயந்தியன்று அதிகாலையில் குளித்து வீட்டினை சுத்தம் செய்ய வேண்டும். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் நரசிம்மரை வழிபட உகந்த நேரம். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்றவற்றைப் படைக்க வேண்டும்.

 

 

 

 

 

NEXT STORY