மதுரை: வரும் தீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உலகெங்கும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பலநூறு ஆண்டுகள் பழமையான இந்த கோவில் 17-ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் சீரமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள சிற்பங்களும் கோபுரங்களும் உலகப்பிரசித்திப் பெற்றது. இந்நிலையில் இனி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக தலா ஒரு லட்டு வழங்கப்பட உள்ளதாக தக்கார் கருமுத்து கண்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும், அதிகாலை நடை திறந்ததில் இருந்து, இரவு நடை சாத்தப்படும் வரை, தீபாவளி திருநாளான வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான லட்டு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கலாம். இதற்காக தமிழக அரசிடம் இருந்து முறையான அனுமதியும் வாங்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை போலவே இனி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் முதல் முறையாக லட்டு பிரசாதம் வழங்குவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.