அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்மிகம்
Updated Aug 14, 2019 | 18:05 IST | Times Now

அத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் தான் முடிவெடுக்க வேண்டும்

Athi varadar dharsan, அத்திவரதர் தரிசனம்
அத்திவரதர் தரிசனம்  |  Photo Credit: Twitter

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் அத்திவரதர் தரிசனத்தை மேலும் கால நீட்டிப்பு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. கோவிலின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதர் ஜூலை 31-ந் தேதி வரை சயன கோலத்திலும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்திலும் காட்சி அளித்து வருகிறார்.

அத்திவரதரை காண தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காஞ்சி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்த்து பக்தர்கள் ஓய்வெடுத்து செல்ல வசதியாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 44 நாட்களில் 92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.  கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக  உண்டியலில் 6 கோடியே 81 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளானர்.

அத்திவரதர் வைபவத்தின் 45-வது நாளான இன்று இளம் ரோஸ் வண்ண பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்திவரதரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். வரும் 16-ம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. பொது தரிசனத்தில் அத்திவரதரை காண சுமார் 5 கி.மீ தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர். 

இந்த சூழலில், மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதால் அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தரிசன நாட்களை நீட்டிக்க முடியாது என தெரிவித்துவிட்டது. தரிசனத்தை நீட்டிப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் தான் முடிவெடுக்க வேண்டும் இதுதொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

NEXT STORY
அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு Description: அத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் தான் முடிவெடுக்க வேண்டும்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...