’தாய்வழிச்சமூகம்’ கோட்பாட்டை உண்மையாக்கும் கொற்றவை வழிபாடு!

ஆன்மிகம்
Updated Apr 23, 2019 | 21:57 IST | Times Now

சங்க இலக்கியங்களில் இவளை பழையோள் எனவும், காணமற் செல்வி எனவும் குறிப்பிடுகின்றனர். சிலப்பதிகாரமே கொற்றவையை பெருமளவில் உயர்தூக்கி காட்டியுள்ளது.

spiritual, ஆன்மிகம்
பெரிய நெசலூர் கொற்றவை சிலை  |  Photo Credit: Twitter

சென்னை: சங்ககாலம் தொட்டே சிவன், விஷ்ணு, அம்பாள் என ஏராளமான தெய்வவழிபாடுகள் நம்மிடையே கடைபிடிக்கப்படும் நிலையில் சங்ககாலத்திற்கு முன்பும், அதன் பிறகும் கூட தமிழ் மக்களின் முதன்மைத் தெய்வமாக வணங்கப்பட்டவள் ‘கொற்றவை’.

காலப்போக்கில் அவளுடைய உருவத் தோற்றங்களில் சமயங்களில் வளர்ச்சிக்கேற்ப பலப்பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், எவ்வித மத கோட்பாடுகளுக்கு அடங்காதவள் கொற்றவை.

தமிழ் இலக்கியம் மூலமாக அறிய வருவது என்னவென்றால் கொற்றவை என்பவள் பாலை எனப்படும் மண் நிறைந்த பிரதேசத்திற்கான தெய்வம். மறவர் மற்றும் எயினர்(ஆறலைக் கள்வர்கள்) என்னும் பிரிவினர் கொற்றவை தெய்வத்தை வணங்கி வந்துள்ளனர். இதை சங்ககாலம் பிற்பட்ட இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 

kotravai

``அடு புலி அனையவர், குமரி, நின் அடி தொடு
படு கடன் இது உகு, பலி முக மடையே!’’ என்கிறது தொல்காப்பியம். கண்ணகியும், கோவலனும் மதுரைக்குள் நுழையும் முன் வேட்டுவச்சேரியில் நடைபெறும் கூத்துப்பாடலாக இதனை வடிவமைத்துள்ளார் சிலப்பதிகாரம். 

சங்க இலக்கியங்களில் இவளை பழையோள் எனவும், காணமற் செல்வி எனவும் குறிப்பிடுகின்றனர். சிலப்பதிகாரமே கொற்றவையை பெருமளவில் உயர்தூக்கி காட்டியுள்ளது. பழையோள் என்றால் பழமையான, தொன்மமான பூர்வகதையைக் கொண்டவள் என்று அர்த்தம் தொனிக்கிறது. 

பொன்னிழையால் கட்டப்பட்ட சடைமுடி, பிறைச்சந்திரன் போல தோற்றமளிக்கும் அச்சடையிலேயே கட்டப்பட்டுள்ள காட்டுப்பன்றியின் வளைவான கொம்பு. கழுத்தில் அஞ்சா வலிமை கொண்ட புலியின் வாயைப் பிளந்து அதிலிருந்து பிடுங்கப்பட்ட பற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புலிப்பல் தாலி, இடையில் புலித்தோல் ஆடை, கையில் வில் என கலைமான் மேல் ஆரோகணித்திருப்பவளாக கொற்றவை வர்ணிக்கப்படுகிறாள்.

போருக்குச் செல்பவர்கள் கொற்றவையை வழிபட்டு அவளுக்கு பலி கொடுத்தும் சென்றுள்ளனர். ’ஓங்குபுகழ் கானமர் செல்வி’ என்கிறது அகநானூறு. சிலம்பு சொல்லும் மதுரையில் மீனாட்சி கோயில் குறிப்பிடப்படவில்லை. கொற்றவை கோயிலே முன்னிறுத்தப்பட்டுள்ளது. சோழர்கள் காலத்திலும் நிசும்பசூதனியாக வழிபடப்பட்டவள் கொற்றவையே என்கிற கருத்துக்களும் நிலவி வருகின்றன. காளி, துர்கா, மகிஷாசுரமர்த்தினி போன்ற தெய்வங்களும் கொற்றவையின் மருவிய தோற்றங்களா என்பதும் நிரூபணம் ஆகியிருக்கவில்லை. இன்னொரு புறம் ‘மாலவர்க்கு இளங்கிள்ளை’ என்பதால் திருமாலுக்கு தங்கையாக கூறப்படும் பார்வதியின் அம்சமான மதுரை மீனாட்சியும் கொற்றவை அம்சமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.

எனினும், கொற்றவை என்னும் பெண் தெய்வ வழிபாட்டில், இன்றைய காலகட்ட பெண் தெய்வங்களும் ஒன்றா என்பது குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் ‘தாய்வழிச் சமூகம்’ என்கிறதற்கு ஆதாரமாக விளங்குவது கொற்றவை வழிபாடு என்பதில் ஐயம் ஏதுமில்லை. 

NEXT STORY
’தாய்வழிச்சமூகம்’ கோட்பாட்டை உண்மையாக்கும் கொற்றவை வழிபாடு! Description: சங்க இலக்கியங்களில் இவளை பழையோள் எனவும், காணமற் செல்வி எனவும் குறிப்பிடுகின்றனர். சிலப்பதிகாரமே கொற்றவையை பெருமளவில் உயர்தூக்கி காட்டியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola