'ஆழி சூழ்’ கோயிலில் ஆறு மணி நேரம் மட்டும் தரிசனம் - விந்தையான கோலியாக் ‘நிஷ்கலங்கர்’!

ஆன்மிகம்
Updated May 27, 2019 | 18:37 IST | Times Now

அரபிக்கடலின் அதிசயமாக விளங்குகிறது இந்த கோயில். குஜராத் மாநிலம், பாவ்நகரில், கோலியாக் என்னும் கடலோர கிராமப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ’ஆழிசூழ்’ கோயில்.

temple, கோயில்
நிஷ்கலங்கர் கோயில் வழி  |  Photo Credit: Facebook

காந்திநகர்: பக்தர்களுக்கு இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோயில்கள் பெரும்பாலும் மலைக்கோயில்கள், சமதளக் கோயில்கள், குகைக்கோயில்கள், தீவுக்கோயில்கள் என பல இயற்கைப் பரப்புகளில் அமைந்திருக்கும்.  

ஏன் கடற்கரையோரமாகக் கூட அமைந்திருக்கும். ராமேஸ்வரம், கன்னியாகுமரி கோயில்கள் அவ்வகையைச் சார்ந்தவைதான்.

ஆனால், நிலப்பரப்பைத் தாண்டி நீர் நிறைந்து அலைப்பரப்பும் கடலின் ஊடே அமைந்திருக்கும் கோயில் பற்றி அறிந்திருக்கிறீர்களா? பல்வேறு ஆச்சரியங்களை தன்னுள் உள்ளடக்கிய இந்த கோயில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. 

koliyak temple

அரபிக்கடலின் அதிசயமாக விளங்குகிறது இந்த கோயில். குஜராத் மாநிலம், பாவ்நகரில், கோலியாக் என்னும் கடலோர கிராமப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ’ஆழிசூழ்’ கோயில்.

’நிஷ்கலங்க மகாதேவர் கோயில் அல்லது கோலியாக் சிவன் கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயில், கோலியாக் கடற்கரை கிராமத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ள பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அருள்பாலிக்கும் லிங்க சொரூப மூர்த்தி ஒரு சுயம்பு. பாண்டவர்கள் மகாபாரதப் போரிற்கு பிறகான பாவங்களைக் கழுவ இங்கு வந்து, நிஷ்கலங்கரை வழிப்பட்டதாக தெரிவிக்கிறது புராணம். 

கடல் உள்வாங்கி வழிவிடும் நேரம் மட்டுமே இவரை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. தினசரி ஒரு குறிப்பிட்ட வேளையில் மட்டும் இங்கு கடல் நீர் உள்வாங்குகிறது. அதுவும் சரியாக ஆறு மணி நேரங்கள் மட்டுமே என்பது அமானுஷ்யம் கலந்த ஆச்சரியம். சரியாக காலை எட்டு முதல் எட்டு முப்பது மணி அளவில் கடல் உள்வாங்குகிறது. அதனைத் தொடர்ந்து காத்திருக்கும் பக்தர்கள் கால்நடையாகவே அந்த மணல்திட்டை சென்றடைகின்றனர்.  அங்கு ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. சிதிலமடைந்த கோயிலில் இருந்த சிவலிங்கங்கள் என்று கூறப்படுகிறது.

கடல் உள்வாங்கிய இடத்தில் இருந்து நடந்து சென்று மக்கள் சிவலிங்கங்களைத் தரிசிக்கின்றனர். மீண்டும் மதியம் பனிரெண்டு முதல் பனிரெண்டு முப்பது வரை அமைதியாயிருந்த கடற்பரப்பு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்ப்பரிக்க துவங்குகிறது. தொடர்ந்து 2 முதல் 2.30 மணிக்குள் மீண்டும் கடல் பழைய நிலையை அடைந்துவிடுகிறது. இதனையடுத்து பக்தர்கள் வேகமாக கடற்கரை நோக்கி திரும்பி வந்தடைகின்றனர். கடல் வழிவிட்டாலும் சேறும், கற்களும் நிறைந்திருக்கும் அப்பாதையில் மிக கவனமுடனே பயணித்து கோயிலை அடைய வேண்டும். 

அமாவாசை, பெளர்ணமி மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்த கடல் உள்வாங்குவது அதிக நேரம் நீடிக்கும். இந்நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். இக்கோயிலின் கொடிமரம் மட்டும் எவ்வித சீற்றங்களாலும் அழியாமல் உயர்ந்து நிற்பது அதிசயத்திலும் அதிசயம். 


 

NEXT STORY