அத்திவரதர் 20-வது நாள் தரிசனம்: பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ஆன்மிகம்
Updated Jul 20, 2019 | 14:42 IST | Times Now

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் பெருவிழாவின் 20-வது நாள் வைபவம் இன்று நடைபெற்று வருகிறது. அத்திவரதர் காவி நிற பட்டு உடுத்தி காட்சி அளித்து வருகிறார்.

Athi varadar darshan
அத்திவரதர் திருவிழாவில் பக்தர்கள் கூட்டம்  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முதியோர், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் கூடுமானவரை தரிசனத்தை தவிர்க்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் பெருவிழா நடைபெறுகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர். பொது தரிசனம் செய்ய குறைந்தது 4  மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது.  ஆன்லைன் மூலம் வி.ஐ.பி. தரிசனத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

special announcement for Athi varadar

அத்திவரதர் பெருவிழாவின் 20-வது நாளான இன்று அத்திவரதர் காவி நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். விடுமுறை தினம் என்பதால் இன்றும் அதிகளவில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதிகாலை முதல் வடக்கு மாட வீதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

எதிர்பார்த்ததை விட பல மடங்கு கூட்டம் வருவதால் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் திணறி வருகின்றனர்.  கூட்டத்தை கட்டுப்படுத்த 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரே 2 லட்சத்துக்கும் அதிகான பக்தர்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். 

Athi varadar

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். "பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அத்திவரதரை தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4 மணி முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் ஆகிறது. எனவே, உடல் தளர்ந்த முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் அவர்களை அழைத்து வருவோர் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வினை கூடுமானவரை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் இன்று நாளிதழ்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...