காஞ்சிபுரம்: அத்திவரதரை ஆகஸ்டு 16 ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். மேலும், 16 ஆம் தேதி பக்தர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து தரிசன நேரம் நீட்டிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதர் 39-வது நாளாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 31 நாட்கள் சயன கோலத்திலும், 8 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளித்து வரும் அத்திவரதரை தரிசிக்க தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் காஞ்சிபுரம் நகரமே ஸ்தம்பித்துள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக குவிந்துள்ளதால் முக்கியஸ்தர்களுக்கான சிறப்பு தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக அத்திவரதர் வைபவத்தின் மேற்கு கோபுரத்திற்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடியும் வரை விஐபி தரிசனம் நிறுத்திவைக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறுகையில், காஞ்சிபுரம் நகரத்தில் 13, 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாதாகக் கூறினார். 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் கிடையாது என்றும், 16 ஆம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. பக்தர்கள் கூட்டத்தைப் பொறுத்து தரிசன நேரம் நீட்டிக்கப்படும் என்றும் கூறினார்.
முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் கூடுதலாக 500 சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், 25,000 முதல் 30,000 பேர் வரை தங்கும் வகையில் கூடாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசிக்க ஏதுவாக சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 38 நாட்களில் சுமார் 70.25 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர். நேற்று மட்டும் சுமார் 3.70 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாக, இன்று கோவில் நடை 2 மணி நேரம் தாமதமாகத் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.