விஜயதசமி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 பெண்கள் வீணை கச்சேரி

ஆன்மிகம்
Updated Oct 09, 2019 | 10:51 IST | Times Now

கடந்த 20 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கச்சேரியில் 22 பாடல்களுக்கும் மேல் வாசிக்கப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 வீணை கச்சேரி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 வீணை கச்சேரி  |  Photo Credit: ANI

மதுரை: விஜயதசமி முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 108 பெண்கள் பங்கேற்ற வீணை கச்சேரி நேற்று நடைபெற்றது.

சோபனா எனும் வீணை ஆசிரியை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள வீணை கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கச்சேரியில் 22 பாடல்களுக்கும் மேல் வாசிக்கப்பட்டன. பக்தர்கள், மாணவர்கள், இசை ரசிகர்கள் என பலரும் இந்நிகழ்ச்சியை நேரில் காண வந்தனர்.

108 வீணை கச்சேரி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சிங்கப்பூரில் இருந்து வந்த சுற்றுலா பயணி விவேக் கூறியதாவது: “இக்கச்சேரியை காண நான் சிங்கப்பூரில் இருந்து வருகிறேன். விஜயதசமியை முன்னிட்டு ஞானம் பெருகவும், மழை வேண்டியும் இந்த கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் விருப்பமான திருத்தலம் என்பதால் நான் தொடர்ந்து இங்கு வருகை தருகிறேன்.” இவ்வாறு விவேக் கூறினார்.

ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த சுற்றுலா பயணி வெரோனிக்கா கூறியதாவது: “ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்திருக்கும் எங்களுக்கு இது மிகவும் முக்கியமான நிகழ்ச்சி ஆகும். பெண்களின் வீணை இசையை கேட்டது சிறந்த அனுபவமாக அமைந்தது. இந்திய கலாச்சாரத்தை உலகெங்கிலும் போற்றுகின்றனர். அதனை அனுவிக்க மக்கள் இந்தியா வரவேண்டும்.” இவ்வாறு வெரோனிக்கா கூறினார்.

NEXT STORY