இந்தியாவின் சுதந்திர தினத்தை தேர்வு செய்தது யார்? ஏன்?

செய்திகள்
Updated Aug 15, 2019 | 10:33 IST | Times Now

அன்றைய இங்கிலாந்து பிரதமராக இருந்த க்ளிமெண்ட் அட்லீ, 30 ஜூன் 1948-க்கு முன்பாக இந்தியாவிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

15 August 1947 was not originally scheduled to be the Independence Day
15 ஆகஸ்டு 1947ல் ஆங்கிலேயர் ஆட்சி முடிவடைவதாக முதலில் திட்டம் இல்லை  |  Photo Credit: Twitter

இந்திய திருநாட்டில் காலனி ஆட்சி முடிவுக்கு வந்த நாளான ஆகஸ்டு 15, 1947-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். அன்று, இந்தியா சுதந்திரம் அடைந்த அதே வேளையில் பாகிஸ்தான் எனும் புதிய நாடு உதயமானது. இருப்பினும், 15 ஆகஸ்டு 1947ல் ஆங்கிலேயர் ஆட்சி முடிவடைவதாக முதலில் திட்டம் இல்லை.

அன்றைய இங்கிலாந்து பிரதமராக இருந்த க்ளிமெண்ட் அட்லீ, 30 ஜூன் 1948-க்கு முன்பாக இந்தியாவிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும், மேற்கண்ட தேதிக்கு 10 மாதங்களுக்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியாவின் கடைசி வைஸ்ராய் முடிவுக்கு கொண்டு வந்தார்.

பிப்ரவரி 1947ல் இந்தியாவின் வைஸ்ராயாக லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் என்பவரை அட்லீ நியமித்தார். இந்தியாவிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கும் பொறுப்பு மவுண்ட்பேட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரிவினையை தவிர்க்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்த போதும் பிரிட்டனின் நன்மதிப்பு கெடாதவாறு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் உரிமையும் மவுண்ட்பேட்டனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பிரிட்டனுக்கு சென்று அந்நாட்டின் கடற்படைத் தலைவர் ஆகவேண்டும் என்ற கனவில் மவுண்ட்பேட்டன் இருந்தார். அதனால், சீக்கிரமாக தனது நாட்டிற்குத் திரும்ப ஏதுவாக இந்தியாவிற்கு முன்கூட்டியே சுயநிர்ணய உரிமை வழங்குவது என முடிவு செய்தார். 1854 முதல் இங்கிலாந்தில் கடற்படைத் தலைவராக மவுண்ட்பேட்டனில் தந்தை பதவி வகித்தார். பிறகு, ஆங்கிலேயர்கள் மத்தியல் ஜெர்மானிய எதிர்ப்பு வலுத்ததால் அவர் பதவி விலக நேரிட்டது.

ஓராண்டுக்கு மேல் காத்திருந்தால் இந்தியாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று மவுண்ட்பேட்டன் கருதினார். மதக் குழுக்களுக்கு இடையே புகைந்த வெறுப்புணர்வு, ஜவகர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆகியவை காரணமாக பிரிவினையை வலியுறுத்தினார் மவுண்ட்பேட்டன்.

1947 ஜூன் 3-ம் தேதி அன்று மவுண்பேட்டன் திட்டம் எனப்படும் ஜூன் 3 திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தது. அதில், இந்தியா பாகிஸ்தான் எனும் இரு நாடுகளாக பிரிட்டிஷ் இந்தியாவை பிரிப்பது என்றும், பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களை இவ்விரு நாடுகளுக்கும் பங்கிட்டுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மவுண்ட்பேட்டன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், இந்திய விடுதலை சட்டம் 1947ஐ ஜூலை 1947ல் நிறைவேற்றியது. 15 ஆகஸ்டு 1947 இந்தியாவிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும் என்று மவுண்ட்பேட்டன் அறிவித்தார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ராணுவம் மவுண்ட்பேட்டன் முன்பு சரணடைந்த நாள் 15 ஆகஸ்டு 1945 என்பதால் அந்த நாளை அவர் தேர்வு செய்தார். ஆனால், இந்திய ஜோதிடர்களின் கணிப்பு படி அந்த நாள் மங்கலமற்ற, துரதிர்ஷ்டவசமான, புனிதமற்ற நாளாக இருந்தது. ஜோதிடர்கள் வேறு நாட்களை பரிந்துரைத்த போதும் மவுண்ட்பேட்டன் பிடிவாதமாக இருந்தார். ஆகஸ்டு 14-ம் தேதிக்கும் 15-ம் தேதிக்கும் இடைப்பட்ட நள்ளிரவு பொழுதில், ஹிந்து நாள் காட்டியின் படி சூரிய உதயம் சமயத்தில் சுதந்திரம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சுதந்திர தினம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரிவினைக் கோடு வரைய சிரில் ராட்கிளிஃபிற்கு ஐந்து வாரங்களே இருந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக லார்ட் மவுண்ட்பேட்டன் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கும் கவர்னர் ஜெனரலாக செயல்பட மவுண்ட்பேட்டன் விரும்பிய போதும் ஜின்னா அதனை ஏற்க மறுத்தார். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ஜூன் 1948 வரை பத்து மாதங்கள் மவுண்ட்பேட்டன் புது டெல்லியில் இருந்து பணியாற்றினார்.

NEXT STORY
இந்தியாவின் சுதந்திர தினத்தை தேர்வு செய்தது யார்? ஏன்? Description: அன்றைய இங்கிலாந்து பிரதமராக இருந்த க்ளிமெண்ட் அட்லீ, 30 ஜூன் 1948-க்கு முன்பாக இந்தியாவிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...