விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் கே.சிவன்

செய்திகள்
Updated Sep 21, 2019 | 13:49 IST | Times Now

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் கே.சிவன், 'we have not been able to establish communication with lander' says K sivan
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் கே.சிவன்  |  Photo Credit: ANI

சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். 

செப்டம்பர் 7-ஆம் தேதி லேண்டர் விக்ரம் சாப்ட் லேண்டிங் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயன்றபோது, நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் தொடர்பை இழந்தது. அதனை தொடர்ந்து சந்திராயன்-2 ஆர்பிட்டர் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது. திட்டமிட்டபடி தரையிறங்க முடியாவிட்டாலும் லேண்டருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் விக்ரம் லேண்டரரை தொடர்பு கொள்ள இஸ்ரோவுக்கு நாசாவும் உதவியது.

நிலவின் தென் துருவத்தில் இன்று முதல் வெப்ப நிலை குறையும் காரணத்தால் விக்ரம் லேண்டரின் எலக்ட்ரானிக் பாகங்கள் செயலிழந்துவிடும். இதனை கருத்தில் கொண்டு தான் ஒரு நிலவு தினம், அதாவது பூமியின் படி 14 நாட்களுக்கு செயல்படும்படி விக்ரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் "சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆர்பிட்டரில் 8 கருவிகள் உள்ளது. அவை அனைத்தும் அதற்கான வேலைகளை சரியாக செய்து வருகிறது. லேண்டரை பொறுத்தவரை, எங்களால் அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே நாங்கள் அடுத்ததாக ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளோம்" என்று தெரிவித்தார். 

சந்திராயன்-2 திட்டம் முழுமையாக எதிர்பார்த்தவாறு செயல்படாத நிலையில், அடுத்ததாக இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் ஈடுபட்டுவருகிறது. 'ககன்யான்' திட்டத்தில் விண்வெளிக்கு செல்லவுள்ள வீரர்களை தேர்ந்தெடுக்கும் முதற்கட்ட தேர்வு சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசினில் நடைபெற்றது.            

NEXT STORY