புது டெல்லி: மக்களவை உறுப்பினரும் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
மதிமுக சார்பில் சென்னையில் 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் முப்பெரும் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஃபரூக் அப்துல்லாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்பதால் அவரை கண்டுபிடித்துத் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முன் அப்பகுதியில் உள்ள முக்கிய தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அந்த வகையில், தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவின் தந்தையான 81 வயதாகும் ஃபரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், அவரை கண்டுபிடித்துத் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.