குடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் பிரதமர் மோடி

செய்திகள்
Updated May 24, 2019 | 22:33 IST | Times Now

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

PM Narendra modi, president Ram Nath Kovind, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் 

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவைத் தேர்தல் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது. 

வாக்கு எண்ணும் பணி நள்ளிரவை தாண்டியும் நீடித்த நிலையில், பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 

காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்று 2-வது இடத்தையும், 23 இடங்களில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் 4 லட்சத்து 79 ஆயிரத்தி 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளார். பாஜக பெற்றுள்ள வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. உடல்நலக்குறைவால் அருண்ஜேட்லி இதில் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து 16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த நரேந்திர மோடி 16-வது மக்களவையை கலைப்பதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினார்.  மேலும், தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி குடியரசு தலைவரிடம் வழங்கினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து வரும் 30-ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார். 

NEXT STORY
குடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் பிரதமர் மோடி Description: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Loading...
Loading...
Loading...