மும்பை: மகாராஷ்டிராவில் குடிரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார்.
நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக தெரிவித்து விட்டது.
இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். மேலும் திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்குள் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனை தெரிவிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அந்தக் கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து 3-ஆவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மராட்டிய அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா தொடர் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இன்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளாா். ஆளுநரின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.