நிரவ் மோடி ஜாமீன் மனுவை 4-வது முறையாக நிராகரித்து இங்கிலாந்து நீதிமன்றம்

செய்திகள்
Updated Jun 12, 2019 | 17:40 IST | Times Now

மோசடி வழக்கில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள இந்திய வைர வியபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு 4-வது முறையாக நிராகரிக்கப்பட்டது.

 Nirav Modi, நிரவ் மோடி
நிரவ் மோடி  |  Photo Credit: BCCL

டெல்லி: லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய வைர வியபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் இன்று நிராகரித்தது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை முறைகேடாக பரிமாற்றம் செய்ததாக மும்பை வைர வியபாரி நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், நிரவ் மோடி லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். 

பின்னர் கடந்த மார்ச்19-ம் தேதி நிரவ் மோடி புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க முயன்ற போது லண்டன் போலீஸார் நிரவ் மோடியை கைது செய்தனர். தொடர்ந்து 20-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நிரவ் மோடி. ஜாமீன் கேட்டு அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.  

சிறையில் உள்ள நிரவ் மோடியின் நீதிமன்றக்காவல் கடந்த மார்ச் 29-ம் தேதி முடிந்தது. அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்கினால் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனால் லண்டன் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து மூன்றாவது முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி லண்டன் ராயல் கோர்ட் முன் 4-வது முறையாக இன்று ஆஜரானார். ஏற்கனவே 3 முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து நிரவ்மோடியை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

NEXT STORY