தினகரனுக்கு வாக்களியுங்கள்.. சு. சுவாமி கருத்தால் பாஜக - அதிமுக அதிர்ச்சி!

செய்திகள்
Updated Apr 16, 2019 | 11:48 IST | Times Now

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன், சுப்பிரமணியன் சுவாமி
டிடிவி தினகரன், சுப்பிரமணியன் சுவாமி  |  Photo Credit: Twitter

டெல்லி:  டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளது தமிழக பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

17-வது மக்களவைத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.  இறுதிக் கட்டத் தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக - அதிமுக கூட்டணி மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் எனக் கூறி வாக்கு சேகரித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களியுங்கள் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல் கட்சிகள். ஆனால், தினகரனின் அமமுக கட்சிக்கு தேசிய ஒற்றுமை உணர்வு உள்ளது. எனவே தமிழக மக்கள் அனைவரும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இந்த முறை வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது தமிழர்கள் டிடிவி தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என வெளிப்படையாக கூறி பரபரப்பை கிளப்பினார் சுப்பிரமணியன் சுவாமி.  உலக அரசியல், இந்திய அரசியல், தமிழக அரசியல், அரசியல் கட்சித் தலைவர்கள் என யாரையும் இவர் விட்டு வைப்பதில்லை. அதிலும், தமிழக அரசியலையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் தனது கருத்துக்களால் அவ்வப்போது சீண்டி வருபவர்.

ஜல்லிக்கட்டு போராட்டம், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு, ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் எண்ட்ரி என யாரையும் விட்டு வைப்பதில்லை.  தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக தினகரனுக்கு வாக்கு கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது பாஜகவினரை மட்டுமல்லாமல் அதிமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  


 

NEXT STORY
தினகரனுக்கு வாக்களியுங்கள்.. சு. சுவாமி கருத்தால் பாஜக - அதிமுக அதிர்ச்சி! Description: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...