தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை பதவியேற்றார்

செய்திகள்
சு.கார்த்திகேயன்
Updated Sep 08, 2019 | 17:49 IST

தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும், அம்மாநிலத்தின் முழு நேர ஆளுநர் என்ற பெருமையும் தமிழிசை செளந்தரராஜனுக்கு கிடைத்துள்ளது.

Tamilisai Soundararajan, Governor of Telangana
Tamilisai Soundararajan, Governor of Telangana   |  Photo Credit: Twitter

ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த 1-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை செளந்தரராஜன் விலகினார்.

இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில் அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், தமிழிசை செளந்தரராஜனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும், அம்மாநிலத்தின் முழு நேர ஆளுநர் என்ற பெருமையும் தமிழிசைக்கு கிடைத்துள்ளது.

ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட தமிழிசைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ், ஏ.சி.சண்முகம், சரத்குமார், ராதிகா சரத்குமார், காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழிசையின் தந்தையுமான குமரிஆனந்தன், தமிழிசை கணவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

NEXT STORY