சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

செய்திகள்
Updated Oct 22, 2019 | 12:38 IST | Times Now

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

P Chidambaram, ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்  |  Photo Credit: BCCL

புது டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் செல்லாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபன்னா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வாதிட்டனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் 60 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைய 2 நாட்கள் முன்பு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட 14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, விசாரணை நிறைவடையாத நிலையில் ப.சித்மபரத்திற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.

முன்னதாக, ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, ஆகஸ்டு 21 தேதி சிபிஐ அவரை கைது செய்தது. இதை தொடர்ந்து, ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. சிபிஐ காவலை தொடர்ந்து ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் ப.சிதம்பரம் தரப்பு ஜாமீன் மனு தாக்கல் செய்தது. அம்மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

NEXT STORY