இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: இன்று நள்ளிரவு முதல் அமல்!

செய்திகள்
Updated Apr 22, 2019 | 15:52 IST | Times Now

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்.

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
இலங்கையில் அவசர நிலை பிரகடனம்  |  Photo Credit: IANS

கொழும்பு : இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது தொடர்பாக, அந்நாட்டு அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் மைத்ரிபால சிறிசேன வெளியிட்டார்.

இலங்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கொழும்பு திரும்பினார். இதனையடுத்து, இன்று பாதுகாப்பு சபை கூட்டம் அதிபர் சிறிசேன தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்குப்பின் இன்று நள்ளிரவுமுதல் நாடுமுழுவதும் அவசரநிலை பிரகடனப் படுத்தப்படுவதாக அதிபர் சிறிசேன அறிவித்தார். மேலும், தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிபர் சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையில் நாளை துக்க தினமாக கடைபிடிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக  விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை, அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிரிசேனா அமைத்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கோடா, முன்னாள் காவல்துறை அதிகாரி என்.கே.இளங்கூன், சட்டம்- ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிரி ஜெயமன்மி ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

 

 

NEXT STORY
இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: இன்று நள்ளிரவு முதல் அமல்! Description: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்.
Loading...
Loading...
Loading...