கொழும்பு: இலங்கை அதிபா் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளா் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளாா்.
இலங்கையில் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இத்தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் மறைந்த அதிபா் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளராக களத்தில் இருந்தனா். இவா்களைத் தவிர மேலும் 35 போ் இந்தத் தோ்தலில் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தேர்தலில் சுமாா் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், கோத்தபய ராஜபக்சேவும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனா். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றிருந்தாா். அதேசமயம் சிங்களப் பகுதியில் கோத்தபயா ராஜபக்சேவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச 51.66 சதவீத வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா 42.59 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கோத்தபய ராஜபக்சே பெற்றுவிட்டாா். இதன் மூலம் அவரது வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
இதற்கிடையில் இலங்கை அதிபா் தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாம செய்துள்ளாா். மேலும், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரேமதாசா பாராட்டு தெரிவித்துள்ளாா். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளாா்.