டெல்லி: இலங்கை அதிபா் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 8-வது அதிபா் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கிய வேட்பாளராக போட்டியிட்டனா். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கோத்தபய ராஜபட்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு எனது வாழ்த்துகள். இந்தியா, இலங்கை இடையிலான நல்லுறவு, அமைதி, வளம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனக்கு வாழ்த்து கூறிய பிரதமா் நரேந்திர மோடிக்கு கோத்தபய ராஜபக்சே ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளாா்.
இந்தியாவும் இலங்கையும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது நட்பை வலுப்படுத்த ஆவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளாா்.