நாளை 73வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு!

செய்திகள்
Updated Aug 14, 2019 | 13:12 IST | Times Now

சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து பதற்றமாக சூழல் நிலவி வருவதால் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

73rd Independence Day to be celebrated tomorrow
73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது  |  Photo Credit: Twitter

சென்னை: 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து பதற்றமாக சூழல் நிலவி வருவதால் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ள டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும் மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கும் பார்சல்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லையை ஒட்டிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடலோரக் காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்ற உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் 12,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மோப்ப நாய்களைக் கொண்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு கண்டறியும் வீரர்கள் மூன்று ஷிப்டுகளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே டி.எஸ்.பி முருகன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசாரின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  நடைபெற்றது. சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் கண்டால் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவலளிக்க வேண்டும் என்று சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்கள் மற்ற்ம் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலைய வளாகத்தில் 8 மணி நேரத்திற்கு மேல் நிற்கும் வாகனங்கள் மற்றும் சந்தேகப்படும் படியான வாகனங்கள் ஏதேனும் இருந்தால் உடனே தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது சந்தேகப்படும் படியிலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கண்டால் ரயில்வே உதவி எண் 1512 மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி எண் 182 ஆகியவற்றுக்கு தகவல் கொடுக்கலாம். மேலும், சோதனை நடைபெறுவதால் கால தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, புதுச்சேரியில் இந்திரா காந்தி மைதானத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கொடியேற்ற உள்ள நிலையில் நகரிலுள்ள உணவு மற்றும் தங்கும் விடுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வெளிமாநில வாகனங்கள் சோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

NEXT STORY
நாளை 73வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு! Description: சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து பதற்றமாக சூழல் நிலவி வருவதால் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...