சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் ? அயோத்தி வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

செய்திகள்
Updated Oct 16, 2019 | 17:12 IST | Times Now

அயோத்தி வழக்கில், 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Supreme Court
உச்சநீதிமன்றம்  |  Photo Credit: BCCL

டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை எழுந்தது. சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் இந்த நிலத்திற்கு உரிமை கோரின. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், அந்த இடத்தை மூன்று அமைப்புகளும் சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.  

தினசரி விசாரணை என்ற அடிப்படையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

NEXT STORY