அருண் ஜெட்லி ஒரு சிறந்த அரசியல்வாதி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

செய்திகள்
Updated Aug 24, 2019 | 15:55 IST

அருண் ஜெட்லி ஜி ஒரு  சிறந்த அரசியல்வாதி. இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராக இருந்தார் என பிரதமர் நரேந்திர மோடி எனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 President Ramnath govind, Arun Jaitley, PM Narendra modi
President Ramnath govind, Arun Jaitley, PM Narendra modi  |  Photo Credit: Twitter

டெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  இன்று  சிகிச்சை பலனின்றி காலமானார். பிற்பகல் 12.07 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அருண் ஜெட்லி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிறந்த வழக்கறிஞர், நாடாளுமன்றவாதி, புகழ்பெற்ற அமைச்சராக இருந்த அவர், நாட்டை கட்டமைக்க மகத்தான பங்களிப்பை அளித்தார்' என கூறியுள்ளார். 

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, 'ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கும் அப்படித்தான். என் துக்கத்தை வார்த்தைகளால் கூற முடியாது. அவர் சக்திவாய்ந்த அறிவாளி, ஒரு திறமையான நிர்வாகி ஆவார்’ என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அருண் ஜெட்லி ஜி ஒரு  சிறந்த அரசியல்வாதி. இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராக இருந்தார். அவர் காலமானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஜெட்லியை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மகனிடம் எனது இரங்கலை தெரிவித்தேன். ஓம் சாந்தி. தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், அருண் ஜெட்லி ஜி பல அமைச்சரவை பொறுப்புகளை வகித்தார். அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்கவும், நமது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தவும், பிற நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்தவும்  உதவியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது; அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு' என கூறியுள்ளார். 

அருண் ஜெட்லியின் மறைவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சுரேஷ் பிரபு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...