பிரதமரை விமர்சித்த விவகாரம்.. வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

செய்திகள்
Updated Apr 22, 2019 | 15:33 IST | Times Now

ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் சொன்னதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலே தாம் பேசியதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Rahul Gandhi, Congress president, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவ  |  Photo Credit: Twitter

டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என தான் கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இருப்பினும், பத்திரிகைகளில் வெளியான ஆதாரங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

மேலும், நாட்டின் காவலாளி எனக் கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியை உச்சநீதிமன்றமே திருடன் என்று கூறிவிட்டது என ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உச்சநீதிமன்றம் பிரதமர் மோடியின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, ஆனால், ராகுல் காந்தி பிரதமர் பெயரை பயன்படுத்தியது நீதிமன்ற அவமதிப்பு என குறிப்பிட்டிருந்தது. இதற்கு விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமரை  திருடன் என உச்சநீதிமன்றம் சொன்னதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலே தாம் பேசியதாகவும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

NEXT STORY
பிரதமரை விமர்சித்த விவகாரம்.. வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி Description: ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் சொன்னதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலே தாம் பேசியதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Loading...
Loading...
Loading...