மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது

செய்திகள்
Updated Nov 12, 2019 | 18:17 IST | Times Now

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது

President Ram Nath Kovind
President Ram Nath Kovind  |  Photo Credit: ANI

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 105 இடங்களை கைப்பற்றியது பாஜக. 56 இடங்களில் வென்றிருந்தது சிவசேனா. தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றன. இருப்பினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவும், சிவேசனாவும் இணைந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் பதவி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க போவதில்லை என்று அக்கட்சி ஆளுநரிடம் தெரிவித்துவிட்டது.

இதையடுத்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தாா். இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அத்துடன் ஆட்சி அமைக்க 2 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி ஆளுநரிடம் சிவசேனை கோரிக்கை வைத்தது. ஆனால், சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்துவிட்டாா். இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்திருந்தாா். அதற்காக இன்று இரவு 8.30 மணிவரை அவர்களுக்கு அவகாசம் உள்ளது. 

இருப்பினும் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்படுவது என முடிவெடுக்கப்பட்டது.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அவரது ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
 

NEXT STORY