பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணம்... விவரங்கள் வெளியீடு

செய்திகள்
Updated Sep 19, 2019 | 18:46 IST | Times Now

செப்டம்பர் 22-ஆம் தேதி, ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ’ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உறையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

Narendra Modi, நரேந்திர மோடி
நரேந்திர மோடி  |  Photo Credit: ANI

புது டெல்லி: பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 21-27 வரை 6 நாட்கள் பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் விவரங்களை வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே இன்று வெளியிட்டார்.

நியூயார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்ற இருக்கும் பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டத்தில் ஐக்கிய நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் கட்டமாக, அரசியல் தலைவர்கள், வர்த்தகத்துறை சார்ந்தவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உடனான சந்திப்புகள் நடைபெறும். மூன்றாம் கட்டமாக, நியூயார்க் நகரில் உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21-ஆம் தேதி ஹூஸ்டன் நகரை சென்றடையும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள எரிசக்தி நிறுவன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து விஜய் கேசவ் கோகலே கூறும்போது, “இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவில் எரிசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. 4 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. முக்கிய சந்தையாக நாம் ஒருபுறம் இருக்க, முதலீடுகள் தொடர்பான சாத்தியக்கூறு குறித்தும் ஆலோசிக்கப்படும்,” என்றார்.

செப்டம்பர் 22-ஆம் தேதி, ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்தில் நடைபெறும் ’ஹவ்டி மோடி’ எனும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உறையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். காஷ்மீரி பண்டித்துகள் உட்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த பல்வேறு சமூகங்களின் பிரதிநிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார்.

  • நியூயார்க் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
  • ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறும் பயங்கரவாதம் தொடர்பான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
  • ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் உட்பட சர்வதேச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புளும்பெர்க் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மெலிண்டா பில் கேட்ஸ் பவுண்டேஷன் சார்பில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக, செப்டம்பர் 27-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அத்துடன் தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்.

NEXT STORY