[வீடியோ] பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி!

செய்திகள்
Updated Sep 17, 2019 | 11:07 IST | Times Now

காலை 9:30 மணிக்கு துவங்கிய நர்மதா பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

Prime Minister Narendra Modi, பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி  |  Photo Credit: PTI

அகமதாபாத்: பிரதமர் மோடி தனது 69-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணைக்கு செல்கிறார். இது உலகின் இரண்டாவது பெரிய அணையாகும். மோடி பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரூபானி தலைமையிலான குஜராத் அரசு ’நமாமி தேவி நர்மதா மஹோத்சவ்’ எனும் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. பிரதமரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணிக்கு தாயார் ஹீராபென் அம்மையாரை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர் மோடி, 7 மணி வரை அங்கு நேரம் செலவழித்தார். அதன் பிறகு நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா பகுதிக்கு காலை 8 மணிக்கு வந்தடைந்தார்.

அதனை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு துவங்கிய நர்மதா பூஜையில் கலந்துகொண்டார். பூஜையை தொடர்ந்து காலை 11 மணிக்கு மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

2017-ல் இதே தேதியில் பிரதமர் மோடி சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நர்மதா நதியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து அங்குள்ள கள நிலவரத்தை பிரதமர் மோடி ஆராய்ந்தார்.

நாட்டின் மிகப்பெரிய அணையான சர்தார் சரோவர் அணையானது குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் நீர் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

குஜராத்தில் 75,000 கி.மீ நீளம் கொண்ட கால்வாய்கள் மூலம் 9,633 கிராமங்களுக்கும், 131 நகரங்களுக்கும் அணையின் நீர் கொண்டு செல்லப்படும். முழு கொள்ளளவை எட்டியுள்ள சர்தார் சரோவர் அணை 18 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும்.

NEXT STORY