பிரிக்ஸ் நாடுகளின் 11வது உச்சி மாநாடு நாளை பிரேசில் நாட்டில் உள்ள பிரெசிலியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பிரேசில் புறப்பட்டு சென்றார். நாளை காலை பிரேசிலியாவை அடைகிறார்.
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இது மோடி கலந்துகொள்ளும் 6வது மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து நாடுகளும் உலக மக்கள் தொகையில் 42%, உலக உள்நாடு உற்பத்தியில் 23%, உலக வர்த்தகத்தில் 17% பங்கு வகிக்கின்றன.
இந்த வருட மாநாட்டின் தலைப்பாக புதுமையான வருங்காலத்துக்கான பொருளாதாரா வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெய்ர் மெஸ்சியாஸ் ஆகிய மூவரையும் பிரதமர் மோடி தனித் தனியா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.