சந்திராயன்- 2 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

செய்திகள்
Updated Jul 22, 2019 | 17:19 IST | Times Now

இந்திய நாட்டின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு.என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Narendra Modi, பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி  |  Photo Credit: Twitter

டெல்லி: சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் பூமியின் வட்டப் பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது. இதையடுத்து விண்வெளி மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்திராயன் -2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், " சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டது வரலாற்று முக்கியத்துவமான நாள். இந்த நாள் அனைத்து இந்தியர்களும் பெருமைபட வேண்டிய தருணம். விண்வெளி திட்டத்தில் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், "உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் 
சந்திராயன்-2 ஆய்வு மூலம் நிலவை பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்திய நாட்டின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு.

சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டது இந்திய விஞ்ஞானிகளின் திறமை மற்றும் சக்தியை உலகிற்கு வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த சாதனை இளைஞர்களை அறிவியல் துறைக்கு ஈர்க்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...