கடன் பாக்கி.. ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்!

செய்திகள்
Updated Aug 23, 2019 | 19:30 IST | Times Now

ஏர் இந்தியா எரிபொருள் வாங்கியதற்கான ரூ.4,500 கோடி பாக்கி தொகையை தராததால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சப்ளையை நிறுத்திவிட்டது. 

ஏர் இந்தியாவுக்கு சப்ளையை நிறுத்தியது எண்ணெய் நிறுவனங்கள் , Oil companies stop fuel supply to Air India over payment dues
ஏர் இந்தியாவுக்கு சப்ளையை நிறுத்தியது எண்ணெய் நிறுவனங்கள்   |  Photo Credit: PTI

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் எரிபொருள் வாங்கியதற்கான ரூ.4,500 கோடி பாக்கி தொகையை தராததால், அந்நிறுவனத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சப்ளையை நிறுத்தியுள்ளது. 

இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்திய கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 58,000 கோடி ரூபாய் கடன் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா எரிபொருள் வாங்கியதற்கான பாக்கி தொகை ரூ.4,500 கோடியை தரவில்லை என தெரிகிறது. இதையடுத்து இன்று இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்கு வழங்கி வந்த எரிபொருள் சப்ளையை நிறுத்தியுள்ளது.   

எரிபொருள் வாங்கியதற்கான தொகையை 90 நாட்களுக்குள் திரும்ப தரவேண்டும். ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் ஆகியும் பணத்தை செலுத்தவில்லை. கடந்த வாரமே எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தோம். ஆனால் அதன் பிறகும் பணத்தை தராததால் நேற்று மதியம் முதல் கொச்சின், பாட்னா, புனே, மொஹாலி, விசாகப்பட்டினம், ராஞ்சி ஆகிய விமான நிலையங்களில் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ரூபாய் 60 கோடி தருவதாக கூறியுள்ளது. ஆனால் அவர்கள் எங்களுக்கு தரவேண்டிய தொகையை ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய தொகை என்பதால் எரிபொருள் சப்ளையை  நிறுத்தியுள்ளோம் என அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால் இந்திய அரசாங்கம் இதனை தனியார் நிறுவனத்திற்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் இது போன்ற பிரச்சனை தொடர்ந்தால் ஏர் இந்தியா நிறுவனமும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் போல மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்படும். 


   

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...