தோல்விக்கு பொறுப்பேற்று ஒடிசா, உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா!

செய்திகள்
Updated May 24, 2019 | 15:43 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அக்கட்சி தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

AICC president Rahul Gandhi, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 

டெல்லி: ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. இதன் மூலம் மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.  இந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பதவியேற்க உள்ளார்.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அந்த கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மக்களவை தொகுதியை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. அதுவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கோட்டை எனக் கருதப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார். 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒடிசாவில் நடைபெற்ற சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 

மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பிரசார குழுத் தலைவர் பாட்டீல் ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 
 

NEXT STORY