இலக்கியத்திற்கான 2019-ன் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

செய்திகள்
Updated Oct 10, 2019 | 17:52 IST | Times Now

போலாந்து நாட்டின் ஓல்கா தொகார்ஜிக் மற்றும் ஆஸ்திரியா நாட்டின் பீட்டர் ஹாந்திகா ஆகியோருக்கு முறையே 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize in Literature 2019, இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2019
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2019  |  Photo Credit: Twitter

ஸ்வீடன்: இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் இன்று அறிவிக்கப்பட்டன. போலாந்து நாட்டைச் சேர்ந்த ஓல்கா தொகார்ஜிக் மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹாந்திகா ஆகியோருக்கு முறையே 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைகள் கடப்பதை ஒரு வாழ்க்கை முறையாக சித்தரிக்கும் கற்பனை நயம் கொண்ட எழுத்தாற்றல் பெற்றமைக்காக ஓல்கா தொகார்ஜிக்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மொழி வல்லமையுடன் தனது எழுத்துகளை படைத்த பீட்டர் ஹாந்திகா, மனித அனுபவங்களின் ஆழத்தையும் அகலத்தையும் தனது பேனா முனையால் அளந்த பெருமைக்காக நோபல் பரிசு பெறுகிறார்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுவோரை ஆண்டுதோறும் ஸ்வீடிஷ் அகாடமி தேர்வு செய்யும். இந்நிலையில், அந்நிறுவனத்தில் பாலியல் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பொதுமக்களின் நன்மதிப்பை இழந்ததாகக் கருதி 2018-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவில்லை. எனவே, 2018 மற்றும் 2019-ஆம் அண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளன.

1962-ல் பிறந்த ஓல்கா தொகார்ஜிக்கின் தந்தை பள்ளி நூலகராக பணிபுரிந்தார். ஆகையால், சிறுவயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கம் இவரை தொற்றிக்கொண்டது. இலக்கிய ஆர்வம் கொண்ட இவர் கல்லூரியில் மனோதத்துவம் பயின்றார். கலாச்சார வேற்றுமைகள் குறித்து தனது நாவல்களில் கற்பனை நயத்துடன் எழுதியதற்காக புகழ்பெற்றவர் ஓல்கா தொகார்ஜிக்.

ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹாந்திகா, 1942-ல் பிறந்தவர் ஆவார். நாவல்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதி புகழ்பெற்ற இவர், தனது சட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி எழுத்துத் துறையில் காலூன்றினார். சொந்த படைப்புகளை தவிர்த்து பிற மொழிகளில் பிரசித்தி பெற்ற இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

NEXT STORY