மோடி அரசின் 100 நாள் சாதனை: பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்

செய்திகள்
Updated Sep 10, 2019 | 17:46 IST | Times Now

”பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் நாடு பொருளாதார வளர்ச்சி அடையும். சிறிய வங்கிகளால் ஒரு கட்டத்திற்கு மேல் அபிவிருத்தி செய்ய முடியவில்லை. உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.”

Nirmala Sitharaman, நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்  |  Photo Credit: ANI

சென்னை: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அரசின் சாதனைகள் குறித்து சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடையே பட்டியலிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: ”சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கமுடியும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். தேசிய மகளிர் ஆணைம் ஜம்மு காஷ்மீரில் தனது அதிகாரத்தை செலுத்த முடியும்.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் நாடு பொருளாதார வளர்ச்சி அடையும். சிறிய வங்கிகளால் ஒரு கட்டத்திற்கு மேல் அபிவிருத்தி செய்ய முடியவில்லை. கடன் அதிகம் வழங்கும் திறன் கொண்ட வங்கிகளுடன் கடன் வழங்கும் திறன் குறைவாக உள்ள வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். முன்னதாக, 100 லட்சம் கோடி ரூபாய் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம்.

தொழில் தொடங்க ஏதுவான நாடுகளின் பட்டியலில் 2014-ஆம் ஆண்டு 142-வது இடத்தில் இருந்த நாம் தற்போது 77-ஆம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். இன்னும் முன்னேற வேண்டும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டதும் இந்த நோக்கில் தான்.

முத்தலாக் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இனி கடுமையான தண்டனை வழங்கப்படும். ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் ஊதியம் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து இல்லங்களுக்கும் மின்சாரம் செல்லவேண்டும். சமையல் எரிவாயு இணைப்பு அனைத்து இல்லங்களுக்கும் 2022-க்குள் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அனைத்து இல்லங்களுக்கும் குழாய் மூலம் நீர் விநியோகம் செய்யும் நோக்கில் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டம் மூலம் 8 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 1.95 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 16,000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளனர். 41 லட்சம் பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். 10 கோடி மக்களுக்கு இதற்கான அட்டை வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு மாதம் ரூ.6000 மற்றும் முதியோருக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

மக்கள் உடல்நலம் பெற யோகாவை விளம்பரப்படுத்தினோம். அந்த வகையில் தற்போது ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பல கோடி மதிப்பில் சந்திரயான் 2 திட்டம் செயல்படுத்தியுள்ளோம். கருப்பு பண ஒழிப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் உலக தலைவர்கள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.” இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...