’முரசொலி’ இருப்பது பஞ்சமி நிலமா? - ராமதாசுக்கு ஆதாரம் அளித்த மு.க.ஸ்டாலின்

செய்திகள்
Updated Oct 18, 2019 | 15:22 IST | Times Now

”அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” - மு.க.ஸ்டாலின்

MK Stalin, Ramadoss, மு.க.ஸ்டாலின், ச.இராமதாசு
மு.க.ஸ்டாலின், ச.இராமதாசு  |  Photo Credit: Twitter

சென்னை: முரசொலி நாளிதழ் அமைந்திருக்கும் நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழுக்கு சொந்தமான அலுவலகம் பஞ்சமி நிலங்களை வளைத்து கட்டப்பட்டதாக பாமக நிறுவனர் ச.இராமதாசு குற்றம்சாட்டியதற்கு மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: “மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது ’முரசொலி’ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” இவ்வாறு தனது பதிவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்தை கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலின் திரையரங்கில் கண்டார். இதையடுத்து படக்குழுவை பாராட்டி அவர் செய்த ட்வீட்டில் கூறியதாவது: “படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்.” இவ்வாறு தனது ட்வீட்டில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு படக்குழு சார்பில் நடிகர் தனுஷ் நன்றி கூறி பதில் பதிவிட்டார்.

 

 

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் பதிவை விமர்சித்து பாமக நிறுவனர் இராமதாசு செய்த ட்வீட்டில் கூறியதாவது: ”பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!” இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாசு கூறினார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...