அஞ்சல் துறை தேர்வு ரத்து: இனி தமிழில் தேர்வு நடைபெறும்: ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

செய்திகள்
Updated Jul 16, 2019 | 15:39 IST | Times Now

ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

Minister Ravishankar prasad, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  |  Photo Credit: Times Now

டெல்லி: தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

அஞ்சல் துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வுகள் நடைபெறும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த ஜூலை 14 -ஆம் தேதி நாடு முழுவதும் தேர்வுகள் நடைபெற்றன. இதில் முதல் தாளில் இருந்த கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளில் கேள்விகள் இடம்பெறவில்லை. இதையடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்பட்டதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரத்தை தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் திங்கட்கிழமை எழுப்பினர். மேலும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மறுதேர்வை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.  

இன்றும் அவை தொடங்கியது முதல் அஞ்சல் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தார். அத்துடன் கடந்த ஜூலை 14 ஆம் தேதி நடந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...