தேர்தல் 2019: மோடி அரசுக்கு எதிராக மக்களின் மனநிலை- கோவை மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன்!

செய்திகள்
Updated Apr 18, 2019 | 11:50 IST | Times Now

Lok Sabha Election 2019: மக்களவைத் தேர்தல் மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் என கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

மோடி அரசுக்கு எதிராக மக்களின் மனநிலை உள்ளது
பி.ஆர்.நடராஜன்  |  Photo Credit: Twitter

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கிய தொகுதியாகும். கேரள எல்லைக்கு அருகே அமைந்துள்ள தொழிற்சாலைகள் நிறைந்த இத்தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. அஇஅதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி களமிறங்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரான சி.பி.ராதாகிருஷ்ணனை, எதிர்த்து போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரான பி.ஆர்.நடராஜன் டைம்ஸ் நவ் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல்..

 

கேள்வி: கோயம்புத்தூர் தொகுதி குறித்த தங்களது பார்வை மற்றும் நம்பிக்கைகள் என்ன? கோயம்புத்தூர் தொகுதிக்கான தங்களது திட்டங்கள் என்ன?

பதில்: 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நான் கோயம்புத்தூர் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தபோது ரயில் சந்திப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டேன். கோயம்புத்தூர் மாவட்டத்துக்கென 11 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. மேலும், போத்தனூர் வழியாக சென்ற 5 ரயில்களை கோயம்புத்தூர் வழியாகச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டேன். கோயம்புத்தூர் பகுதியில் இருந்து திருப்பதிக்கு அதிக அளவில் பக்தர்கள் வாடிக்கையாக சென்று வந்ததால், மக்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு வாரம் 3 முறை ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுத்தேன்.

 

தொழிலாளர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக இருந்தபோது, 12 இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு மருத்துவக் கல்லூரி என் முயற்சியால் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது. அதில், தொழிலாளர்களின் குடும்பச் சேர்ந்த மாணவர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்த கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை, 8 மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து தடுத்து நிறுத்தினேன். தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

 

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 1000 ஏக்கர் நிலம் வழங்கிய குடும்பங்கள் 35 ஆண்டுகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் தவித்து வந்தனர். நான் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல் கட்டத் தவணையாக 42 கோடி ரூபாய் பெற்றுத் தந்தேன். மேலும், 170 கோடி ரூபாய்க்கு மேல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது.

 

மத்திய அரசு அச்சகம் மற்றும் கரும்பு ஆராய்ச்சி மையம் ஆகியவை வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படுவதை தடுத்து நிறுத்தினேன். தற்போதும் அந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் பண மதிப்பிழப்பு ஆகிய நடவடிக்கைகளால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூருக்குச் சென்றால், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமை மாறி, கோயம்புத்தூரில் உள்ளவர்களுக்கே தற்போது வேலையில்லாத நிலை உருவாகியுள்ளது. கோயம்புத்தூரில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர், மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல் என்பதே என்னுடைய கருத்து. இந்த தேர்தல் மோடி பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டமாகும்.

நான் மீண்டும் கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனையை சரிசெய்வதே முக்கிய பணியாக இருக்கும்.

 

கேள்வி: அஇஅதிமுக அரசு குறித்த தங்களது பார்வை என்ன?

பதில்: ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர், இந்த அரசு கமிஷன் அரசாக மாறிவிட்டது. பாரதிய ஜனதாவின் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இந்த அரசு உள்ளது. பாரதிய ஜனதா கட்சி இந்த அரசை அடிமையாக கட்டுப்படுத்தி வைத்துள்ளது என்பதே எனது கருத்து.

 

கேள்வி: நாடுமுழுவதும் மோடி அலை குறித்து பேசப்பட்டு வருகிறது. தென் இந்தியாவில் மோடி அலை உண்மையாக உள்ளதா? குறிப்பாக கோயம்புத்தூர் தொகுதியில்?

பதில்: வட இந்தியாவில் மோடி அலை இருப்பதாக கூறப்படுவது பொய்யாகும். 2014 ஆம் தேர்தலில் ஒரு ஈர்ப்பு, மோடி அலை இருத்தது உண்மையே. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது மோடிக்கு எதிரான மனநிலையே மக்கள் மத்தியில் உள்ளது. இதனால், எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்.

 

கேள்வி: அடுத்த பிரதமரா யார் வருவார் என்பது குறித்த தங்களது கருத்து?

பதில்: தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்கள் அதனை முடிவு செய்வார்கள்.

NEXT STORY
தேர்தல் 2019: மோடி அரசுக்கு எதிராக மக்களின் மனநிலை- கோவை மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன்! Description: Lok Sabha Election 2019: மக்களவைத் தேர்தல் மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் என கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...