மக்களவைத் தேர்தல் 2019: டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேர் அறிவிப்பு!

செய்திகள்
Updated Apr 22, 2019 | 12:54 IST | Times Now

டெல்லியில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. டெல்லியில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேர் அறிவிப்பு
வடகிழக்கு டெல்லியில் போட்டியிடும் ஷீலா திட்ஷித், பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி  |  Photo Credit: BCCL

புதுடெல்லி: டெல்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற 20 நாட்களை உள்ள நிலையில், அங்கு போட்டியிடும் 6 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதனால், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மே மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.  பாரதிய ஜனதா கட்சி 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இதுவரை அறிவித்துள்ளது. சாந்தினி செளக் தொகுதியில் மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஜே.பி.அகர்வாலும், ஆம் ஆத்மி கட்சியில் பங்கஜ் குப்தாவும் களமிறங்குகின்றனர்.  வடகிழக்கு டெல்லி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா திட்ஷித் போட்டியிடுகிறார். ஆம் ஆம்தி சார்பில் திலீப் பாண்டே களமறங்குகிறார்.

தெற்கு டெல்லி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் ரமேஷ் பிதுரியும், ஆம் ஆத்மி சார்பில் ராகவ் சதாவும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை.  மேற்கு டெல்லி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் பர்வேஸ் சாகிப் சிங் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் மஹபால் மிஸ்ராவும், ஆம் ஆத்மி வேட்பாளராக பல்பீர் சிங் ஜாக்கரும் போட்டியிடுகின்றனர்.

கிழக்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் அரவிந்தர்  சிங் லவ்லியும், ஆம் ஆத்மி சார்பில் அட்டிஷியும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதிக்கான பாரதிய ஜனதா வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வடமேற்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேஷ் லிலோத்தியாவும்,  ஆம் ஆத்மி சார்பில் குஹன் சிங் ரங்காவும் போட்டியிடுகின்றனர். பாரதிய ஜனதா வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீரர் சுஷீல்குமார் களமிறக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான கோபால் ராய், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பெரும் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்தார். பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி வைத்த அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க தாங்கள் தயாராக இருந்ததாகவும்,  இருந்தபோதும் அவர்கள் பேச்சுவார்த்தையில் இருந்து பின் வாங்கினர் எனக் கூறினார். இதற்கு மேல் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த முடிவு பாரதிய ஜனதா கட்சிக்கு உதவியாக இருக்கும் என்றபோதும், தங்களுக்கு வேறு வாய்ப்பு ஏதுவும் இல்லை என்றும் கோபால் ராய் தெரிவித்தார். 
 

NEXT STORY
மக்களவைத் தேர்தல் 2019: டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேர் அறிவிப்பு! Description: டெல்லியில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. டெல்லியில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.
Loading...
Loading...
Loading...