நாடு முழுவதும் நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - என்னென்ன முன்னேற்பாடுகள்?

செய்திகள்
Updated May 22, 2019 | 21:43 IST | Times Now

நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. நாடு முழுவதும் 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

election 2019, தேர்தல் 2019
தேர்தல் ஆணைய விளம்பர வாசகம்  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

நாட்டில் அடுத்த மத்திய ஆட்சியைத் தீர்மானிப்பதற்கான 17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வேலூர் தொகுதி தவிர்த்து, நாடு முழுவதும் 542 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். 90 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளதில், கிட்டதட்ட 62% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. நாடு முழுவதும் 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்தமுறை சில சிறப்பம்சங்களும், முக்கிய கட்டுப்பாடுகளும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

*ஒவ்வொரு தேர்தலிலும் வழக்கமாக காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகளைத் தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திர வாக்குகள் விரைவாக எண்ணப்பட்டு மாலைக்குள் எந்த கட்சிக்கு பெரும்பான்மை என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும்.

*ஆனால், இந்தமுறை ஒவ்வொரு மக்களவை தொகுதியில் இருந்தும் 5 சட்டமன்றத் தொகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஒப்புகைச்சீட்டு இயந்திரம் என்னும் விவிபேட் எண்ணிக்கையுடன் வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளன.

*மொத்தமாக 20,600 இடங்களில் உள்ள விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் ஒப்பிடும் பணி நடைபெற உள்ளது.

*தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரம் முதலில் வெளியிடப்பட்டாலும், ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை முடிந்தபிறகே இறுதி முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது.

*இதனால், கடந்த முறைகள் போல் இல்லாமல் இந்தமுறை தேர்தல் முடிவுகள் எப்போதையும் விட 5 முதல் 6 மணி நேரம் தாமதமாகும் என்று தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

*தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

*ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும், ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

*கிட்டதட்ட 16000 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தினுள் பேனா, கத்தி போன்ற கூர்மையான பொருட்களுக்கு அனுமதி கிடையாது.

*வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேப்பர் மற்றும் பென்சிலுக்கு மட்டுமே அனுமதி. 

*100 மீட்டர் சுற்றளவில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*100 மீட்டர் சுற்றளவு தாண்டி வெளியில் செல்லும் முகவர்களுக்கு மீண்டும் வாக்கு எண்ணும் மையத்தினுள் அனுமதி கிடையாது.

*வாக்கு எண்ணும் மையத்தினுள் தேர்தல் பார்வையாளர் மற்றும் தேர்தல் அதிகாரி தவிர யாருக்கும் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது.

*ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் முடிவுகள் இணையத்தில் பதிவேற்றப்படும்.

*இறுதியாக குலுக்கல் முறையில் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 விவிபேட் இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்குகள் சரிபார்க்கப்படும்.

*ஒரு மக்களவைத் தொகுதிக்குள் இருக்கும் அனைத்து சட்டப்பேரவை தொகுதி வாக்குகளும் ஒருசேர மொத்தமாக எண்ணப்படும். 

*வாக்கு எண்ணிக்கையையொட்டி சென்னையில் மட்டும் நாளை 5,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

*உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலாக பார்க்கப்படும் இந்திய மக்களவைத் தேர்தலின் 17வது மக்களவை யார் கையில்...நாளை தெரிந்துவிடும்!


 

NEXT STORY
நாடு முழுவதும் நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - என்னென்ன முன்னேற்பாடுகள்? Description: நாளை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. நாடு முழுவதும் 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles