”ஜம்மு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன” - ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் ராஜினாமா!

செய்திகள்
Updated Aug 25, 2019 | 12:43 IST | Times Now

செய்தி நிறுவனங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழல் தம்மை பாதித்துள்ளதாக கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார்

Kannan Gopinathan, கண்ணன் கோபிநாதன்
கண்ணன் கோபிநாதன்  |  Photo Credit: Facebook

புது டெல்லி: 2018 கேரளா வெள்ளத்தின் போது நிவாரணப் பணியில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது அரசு பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

2012 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கண்ணன் கோபிநாதன், தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் மின்சாரம், நகர்புற மேம்பாடு மற்றும் வேளாண்மை துறைகளின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செய்லாளருக்கு வெள்ளிக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை கண்ணன் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழல் தம்மை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். “நாட்டின் ஒரு பகுதியில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து நாட்டின் பிற பகுதிகளில் யாரும் எதிர்வினையாற்றாதது என்னை பாதிக்கிறது. எல்லா இடங்கிளிலும் சிறிது சிறிதாக இது நடந்து வருகிறது. இதனை ஏற்க முடியாது என்கிற எனது எண்ணத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்,” என்று கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் ''எனது கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நான் ஆட்சிப்பணியில் சேரும் போது மற்றவர்களுக்கு குரல் கொடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு எனது சொந்த குரலை பயன்படுத்த முடியவில்லை. ராஜினாமா செய்வதன் மூலம் எனது கருத்து சுதந்திரம் திரும்பும். (நான் ராஜினாமா செய்வது) எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது; வெறும் அரை நாளுக்கு செய்தியாக இருக்கும். இருப்பினும் நான் இதனை செய்ய விரும்புகிறேன். எனது மனசாட்சியின் படி நடந்துகொள்ள விரும்புகிறேன்.’’ என்று கூறியுள்ளார். 

2018-ல் தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த கண்ணன் கோபிநாதன் தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் கேரளா வெள்ளத்தின் போது நிவாரணப் பணியில் ஈடுபட்டார். மற்றொரு அதிகாரி அவரைக் கண்டுகொண்ட பிறகே அனைவருக்கும் அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...